

பெண்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்த இருவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் பாஸ்போர்டுகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரபல திருமண இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். இவரிடம் இந்த இணையதளத்தில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டாக்டர் முகமது சலீம் என்று ஒருவர் அறிமுகமாகினார். அவர் அந்த பெண்ணை பிடித்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். வெளிநாட்டு டாக்டர் மாப்பிள்ளையாக வரப்போவதை நினைத்து மகிழ்ந்த அந்த இளம் பெண்ணும் சலீமிடம் நெருக்கமாக போனில் பேசினார். தொடர்ந்து பரிசு பொருள் அனுப்பி இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த சில தினங்களில் மும்பையில் இருந்து ஒரு பெண், சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை தொடர்புக்கொண்டு, ‘நெதர்லாந்து நாட்டில் இருந்து டாக்டர் முகமது சலீம் உங்களுக்கு பார்சல் அனுப்பி உள்ளார். அதனை பெற்றுக் கொள்வதற்கு ரூ.28 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என ஆரம்பித்து பல்வேறு காரணங்களைக் கூறியும் மிரட்டியும் பலமுறை பணம் பறித்துள்ளனர்.
சென்னை இளம்பெண்ணும் அவர்கள் அனுப்பிய வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் சொன்னபடி பரிசு பொருள் கைக்கு வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம் பெண் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து டெல்லியில் பதுங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ, சிலிட்டஸ் இகேசுக்வு ஆகிய இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் இருவரின் வங்கிக் கணக்கு மற்றும் பாஸ்போர்டுகளை சைபர் கிரைம் போலீஸார் முடக்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.