

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. தரமணியில் 34 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாநகர், புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனால் மாலை 4.30 மணிக்கே இருள் சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.
கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, எழும்பூர், நந்தனம், வேளச்சேரி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. மீனம்பாக்கம், தரமணி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. விடுமுறை நாள் என்பதால், பெரும்பாலானோர் வீடுகளிலேயே இருந்த நிலையில், சாரல் மழையையும், குளிருடன் கூடிய ரம்மியமான மாலை நேரத்தையும் ரசித்து மகிழ்ந்தனர்.
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி தரமணியில் 34 மிமீ, மீனம்பாக்கத்தில் 23 மிமீ, நந்தனத்தில் 18 மிமீ, மேற்கு தாம்பரம், சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 1 மிமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.