

பொன்னேரி அருகே ரேஷன் கடையிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரேஷன் கடையின் தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஆலாடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று முன்தினம் இரவு பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியை, ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் சென்னை டிஎஸ்பி ஜான்சுந்தர் தலைமையில், திருவள்ளூர் அலகு போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சோதனையில் ஈடுபட்டனர்.
100 மூட்டைகள்
அச்சோதனையில், ரேஷன் கடையிலிருந்து, 100 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசியை மினி லாரியில், ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர், லாரியுடன் கூடிய 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தோடு, அதைக் கடத்த முயன்ற ரேஷன் கடையின் தற்காலிக ஊழியர்களான, பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் மற்றும் மெதூரைச் சேர்ந்த தாமோதரன்(61), செல்வராஜ்(23) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.