5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இலக்கு நிர்ணயம்

5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இலக்கு நிர்ணயம்
Updated on
1 min read

2014-15 ஆம் ஆண்டில் 5.50 லட்சம் மடிக்கணினிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு கொள்ள ஏதுவாக மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அவசியமானது என்பதாலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இத்திட்டத்தின்கீழ், 2011-12ஆம் ஆண்டில் 9,07,790 மடிக்கணினிகளும், 2012-13ஆம் ஆண்டில் 7,56,000 மடிக்கணினிகளும் 2013-14ஆம் ஆண்டில் 5,50,000 மடிக்கணினிகளும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டன.

பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முழுவதுமாக வழங்கப்பட்டுவிட்டன. இதுவரை மூன்று கட்டங்களில் மொத்தம் 17,00,000 மடிக்கணினிகள் மாணவ/மாணவியர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மதிப்பு ரூ. 2500 கோடி ஆகும். மீதமுள்ள மடிக்கணினிகள் எல்காட் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அவைகள் மாவட்டங்களிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2014-15 ஆம் ஆண்டில் 5.50 லட்சம் மடிக்கணினிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in