

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து கட்டிடம் ஒப்படைக்கப் படவுள்ளது.
திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி கட்டிம் கட்ட கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன்படி முதலாமாண்டில் 150 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தற்போது மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இது குறித்து பொதுப்பணித் துறை உதவிச் செயற் பொறியாளர் தங்கவேல் கூறியதாவது:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளில் தற்போது 70 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இதில் முதலாமாண்டு மாணவர் களுக்கான வகுப்பறைகள், விடுதிக் கட்டிடங்களில் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன. மாணவர்கள் வரும்போது கட்டிடம் தயாராகிவிடும்.
மேலும் கூடுதல் கட்டிடங்களையும் கட்டி முடித்து டிசம்பர் மாத இறுதிக்குள் மருத்துவக் கல்லூரியின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் முடித்து ஒப்படைத்துவிடுவோம். இதற்காக பணிகள் மும்முரமாக நடக்கின்றன, என்றார்.
மருத்துவக்கல்லூரி டீன் விஜயகுமார் கூறியதாவது:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் ஜனவரியில் முதலாமாண்டு சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கிவிடும். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுவிட்டனர் என்றார்.