

புதுச்சேரியில் கைதி மரணத்தால், சிறைத்துறை ஐஜி, அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மூன்றாண்டுகளாக மத்திய சிறையில் மருத்துவர் நியமிக்கப்படாத அவலமும் நிலவுகிறது.
காரைக்காலில் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அசோக்குமாருக்குக் கடந்த 3-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபின் இறந்து போனதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் காவல் மரணம் என வழக்குப் பதிவு செய்து, தற்போது நீதித்துறை நடுவர் யுவராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே பாகூர் போலீஸாராலும், சிறைத்துறையினராலும் அடித்து ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் அப்போது சிறைத்துறைக் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன், சிறை டாக்டர் வெங்கட ரமண நாயக் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் சுகுமாரன் கூறுகையில், "புதுச்சேரி மத்திய சிறை டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டபின் கடந்த 3 ஆண்டுகளாக சிறைக்கு டாக்டர் நியமிக்கப்படவில்லை. சிறைத்துறை அதிகாரிகள் டாக்டரை நியமிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அசோக்குமார் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுவதற்குக் காலாப்பட்டு சிறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே முழுக் காரணம். அதோடு புதுவை அரசுக்கும் இதில் முழுப் பொறுப்பு உண்டு.
தற்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக உள்ள ரவிதீப் சிங் சகார் உள்ளாட்சித் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இதனால் அவரால் சிறைத்துறையை முறையாக நிர்வகிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு டாக்டரைக் கூட நியமிக்கவில்லை. இதனால், ஒரு சிறைவாசியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
எனவே, சிறைவாசி இறந்ததற்குக் காரணமான சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சகார் உள்ளிட்ட காலாப்பட்டு சிறை அதிகாரிகள் அனைவரையும் உடனே பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவரின் மனைவிக்குத் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். 2 பிள்ளைகளின் படிப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
இது நீதிமன்றக் காவலில் நடந்த மரணம் என்பதால் அசோக்குமார் மாரடைப்பு வந்துதான் இறந்தாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என்ற அம்சங்கள் குறித்தும் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.