

புதுச்சேரியில் 103 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப். 5) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 4,920 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-54, காரைக்கால்-21, ஏனாம்-13, மாஹே-15 பேர் என மொத்தம் 103 பேருக்கு (2.09 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 166 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 795 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 961 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,817 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது. புதிதாக 78 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 374 (97.76 சதவீதம்) ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 259 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.