Published : 05 Sep 2021 02:27 PM
Last Updated : 05 Sep 2021 02:27 PM

வ.உ.சி. வழியில் தமிழ்நாட்டின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. பேட்டி

ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி. சிலைக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி

வ.உ.சி.யின் நினைவுகளை நாம் போற்ற வேண்டும். அவரது வழியில் தமிழ்நாட்டின் அடையாளங்களை, பெருமையை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசு சார்பில் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் கனிமொழி, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் வ.உ.சி.யின் திருவுருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து புகைப்படக் கண்காட்சியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜீ.வி.மார்க்கண்டேயன், வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்திகள் செல்வி, மரகதவல்லி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''வ.உ.சி.யின் 100-வது பிறந்த நாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அழைத்து வந்து, வ.உ.சி.யின் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்துப் பெருமை சேர்த்தார். அந்த வழியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக, தூத்துக்குடி மக்களே பாராட்டக்கூடிய அளவுக்கு யாருமே எதிர்பாராத அளவுக்கு, வ.உ.சி.க்குப் பெருமை சேர்க்கக்கூடிய, அவரைப் போற்றக்கூடிய 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இன்று அந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

வ.உ.சி.யின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற கடமையை உணர்ந்து, வ.உ.சி.யின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டு மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும், தமிழ்ப் பணியில் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திய வ.உ.சி.யின் புத்தகங்களைத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் வழியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும் போன்ற நன்றி கூறத்தக்க அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

தன் வாழ்நாளிலேயே இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக மட்டுமில்லாமல், தமிழ் மொழிக்காகவும், தமிழின் அடையாளங்களுக்காகவும், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தொழிலாளர்களுக்காகத் தொடர்ந்து போராடிய பெருந்தலைவர் வ.உ.சி.யின் நினைவுகளை நாம் போற்ற வேண்டும். அவரது வழியில் தமிழ்நாட்டின் அடையாளங்களை, பெருமையை நாம் பாதுகாக்க வேண்டும்''.

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x