

மகாமகப் பெருவிழாவையொட்டி அகில பாரத துறவியர் மாநாடு கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்க ஆசிரமத்தில் நேற்று தொடங்கியது.
3 நாள் மாநாட்டின் தொடக்க நாளான நேற்று திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகாமகக் குளத்தை நிர்மாணித்த கோவிந்த தீட்சிதர் பரம்பரையைச் சேர்ந்த ரவி தீட்சிதர் இறைவணக்கம் பாடினார்.
பாண்டுரங்க ஆசிரமத்தின் விட்டல் மகராஜ் வரவேற்றுப் பேசியபோது, “இதுபோன்ற மாநாடு இனிமேல் ஒவ்வொரு மகாமகத்தின்போதும் கும்பகோணத்தில் நடத்தப்படும். பாண்டுரங்க ஆசிரமத்துக்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் வருகின்றனர். இந்து மதம் எப்போதும் மற்றவர்களை அரவணைத்துதான் செல்கிறது” என்றார்.
மாநாட்டுக்கு தலைமை வகித்த திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் பேசியபோது, “உலகம் தோன்றியதன் அடையாளமாக உள்ள கும்பகோணத்தில் தற்போது மகாமகம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காசியைவிட இந்த ஊருக்குதான் புண்ணியம். இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. துன்பத்தைப் போக்கிக்கொள்ள தினமும் கோயில்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்” என்றார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியபோது, “சைவமும், வைணவமும் சேர்ந்ததுதான் ஆன்மிகம். கவலைகளை மறக்க இறைபக்தி ஒன்றுதான் வழி. அந்த இடம் கோயிலாக இருக்க வேண்டும். மனிதனின் மனதில் ஒளிந்து, மறைந்துள்ள ஆன்மாவையும், பக்தியையும் வி்ட்டுவிட்டு நாம் மற்ற இடத்தில் தேடிக்கொண்டிருக்கக் கூடாது. கடவுள் என்பவர் வழிபாட்டு பொருள் அல்ல, அவர் வழிகாட்டும் பொருள்” என்றார்.
பேரூர் ஆதீனம் மருதாச்சலம் அடிகளார் பேசியபோது, “இந்தியா மதச் சார்பற்ற நாடு என்கிறார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமே புனிதப் பயணம் செல்ல அரசு நிதி உதவி வழங்குகிறது. அதேபோல இந்துக்களுக்கும் வழங்க வேண்டும். இந்துக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை அறிந்துகொண்டு அரசியல்வாதிகள் நம்மை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்” என்றார்.
இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் பேசியபோது, “கோயில்களில் இருந்து அறநிலையத் துறையினர் வெளியேற வேண்டும். கும்பகோணத்தில் அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்துக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசிய போது, “பதவியில் இருப்பவர்கள் துறவியாக முடியாது. துறவியாக இருப்பவர்கள் பதவி வகிக்க முடியும். வடஇந்தியாவில் நடைபெற்ற கும்பமேளாவில் 4 கோடி பக்தர்கள் நீராடினர். எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அமைதியாக நடைபெற்றது. அதேபோல கும்பகோணத்திலும் அமைதியாக மகாமக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்றுள்ள துறவிகளை நான் வாழ்த்துகிறேன்” என்றார்.
கோவை கற்பகம் பல்கலைக்கழக ஜோதிடவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.பி.வித்யாதரன் பேசியபோது, “புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முறைப்படி இறைவனை வணங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும். தீர்த்தங்கள் நிறைந்துள்ள ஊர் கும்பகோணம். குருபகவானும், சூரியபகவானும் நேருக்கு நேர் சந்திக்கும் நாளில் புனித நீராடுவது பெரும் பயனை அளிக்கும். தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும். இங்கு நடைபெறும் மாநாடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். துறவிகளின் இந்த முயற்சி எதிர்காலத்தில் பெரும் பலனை நமக்கு வழங்கும் என்றார்.
சிறப்புரையாற்றிய வாழும் கலை மைய நிறுவனர் ரவிசங்கர் குருஜி, “திராவிட நாடான தமிழகத்தில் பக்தி உற்பத்தியாகி, கர்நாடகாவில் வளர்ந்து, குஜராத்தில் முக்தி அடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. துறவிகள் அறத்தைக் காப்பாற்றக் கூடிய இறைவனைப் போன்றவர்கள். மக்கள் எல்லோரும் ஜாதி, மதம் பாராமல் ஒற்றுமையாக உள்ளனர். ஆனால், ஜாதிச் சண்டைகள் அரசியல்வாதிகளால் தான் வருகிறது, ஆன்மிகவாதிகளால் வராது. ஜாதிச் சண்டை சச்சரவுகளை ஒழிக்க ஆன்மிகத்தால் மட்டுமே முடியும்” என்றார்.
இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட துறவிகள் கலந்துகொண்டுள்ளனர். இம்மாநாடு இன்று தொடர்ந்து நடைபெறுகிறது. நாளை (பிப்ரவரி 20) நிறைவடைகிறது.