

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செங்கல்பட்டைச் சேர்ந்த ராஜாராம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “அரசியலமைப்பு சட்டம் 165 பிரிவின் படி ஒரு தலைமை வழக்கறிஞரை மட்டுமே நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, அமித் ஆனந்த் திவாரி ஆகிய இருவரை நியமித்து கடந்த ஆக.6-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.
அரசுக்கு அதிகாரம் உள்ளது
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேச வலு ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. நீதிமன்றங்களில் அரசு சார்பில் வாதிடுவதற்கு யாரை பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்று அரசு தான் முடிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.