Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM

சென்னை, கடையம், திருச்செங்கோடு உட்பட 10 இடங்களில் கல்லூரிகள்; கோயில்களின் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் ஊழியர்கள் நியமனம்: ரூ.1,512 கோடியில் 112 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை

சென்னை உட்பட 10 இடங்களில் அறநிலையத் துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகள் ரூ.150 கோடியில் தொடங்கப்படும். கோயில்களின் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:

கோயில் ஊழியர்கள் நலன்

ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். தைத் திருநாளில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள், பணியாளர்களுக்கு சீருடைகள் ரூ.10 கோடியில் வழங்கப்படும். அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசை கற்போருக்கு பயிற்சிக் கால ஊக்கத் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணியாற்றும் 1,500 தகுதியான பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள்.

கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். கிராமப்புற பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் மறைந்தால் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து, ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

கோயில்களின் பாதுகாப்புக்காக, பயிற்சி அளிக்கப்பட்டு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாத்துமீட்க 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும்.

தங்க முதலீடு

கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வந்த பலமாற்று பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றப்படும். வங்கிகளில் அதை முதலீடு செய்து, அதில் இருந்து வரும் வட்டி மூலம், கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யப்படும். இதை கண்காணிக்க 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, முன்னாள் நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்படும்.

புதிய கல்லூரிகள்

சென்னை கொளத்தூர், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளம், திண்டுக்கல் - தொப்பம்பட்டி, வேலூர் - அணைக்கட்டு, திருவண்ணாமலை - கலசப்பாக்கம், தஞ்சாவூர்- திருக்காட்டுப்பள்ளி, திருச்சி - லால்குடி,தென்காசி - கடையம், நாமக்கல் - திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் அறநிலையத் துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகள் ரூ.150 கோடியில் தொடங்கப்படும்.

அறநிலையத் துறை பள்ளிகள், கல்லூரிகளில் கட்டமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது. ஆசிரியர், ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 5 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர், இதர பணியாளர்கள் 496 பேர் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

திருவேற்காடு, திருநாகேஸ்வரம், சிங்கவரம் அரங்கநாத சாமி கோயில், மதுரை அழகர்கோவில், திருக்குவளை எட்டுக்குடி சுப்பிரமணியர், சிக்கல் சிங்காரவேலர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கோயில்களில் ரூ.70.86 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை காளிகாம்பாள், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களுக்கு புதிய வெள்ளி தேர்கள் செய்வது, 9 கோயில்களுக்கு சொந்தமான திருத்தேர்கள் சீரமைப்பு, தேர் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் ரூ.16 கோடியில் செயல்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பகுதிகளில் உள்ள 1,250 கோயில்கள், கிராமப்புறங்களில் உள்ள 1,250 கோயில்களுக்கு திருப்பணிக்காக வழங்கும் தொகை தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.150 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

பக்தர்களுக்கு வசதிகள்

முதல்கட்டமாக 10 முக்கிய கோயில்களில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப்படும். பழநி, ரங்கம் போல, திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோயில்களிலும் செப்.17 முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

கோயில்களில் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்கான கட்டணத்தை கோயில் நிர்வாகமே பணியாளர்களுக்கு செலுத்தும். மணமக்களில் ஒருவர்மாற்றுத் திறனாளியாக இருந்தால், கோயில்களில் நடைபெறும் திருமணத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. கோயில்களின் திரு மண மண்டபத்தில் நடந்தால், பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். கோயில்கள் சார்பில் அனைத்து வசதிகளுடன் 22 திருமணமண்டபங்கள் ரூ.53.50 கோடியில் கட்டப் படும்.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், மதுரை அழகர்கோவில், வடபழனி முருகன், இருக்கன்குடி மாரியம்மன், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மதுரை மீனாட்சியம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், மடப்புரம்பத்ரகாளியம்மன், திருப்பூர் குலமாணிக்கேஸ்வரர், கன்னியாகுமரி திருக்குறிச்சி மகாதேவர், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர், மருதமலை முருகன், விருஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களுக்கு ரூ.60.20 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

மதுரையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.35 கோடியில் அமைக்கப்படும். திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய 5 மலைக் கோயில்களுக்கு கம்பிவட ஊர்திவசதிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய ரூ.1கோடி ஒதுக்கப்படும். பக்தர்களுக்கான முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த 40 முதுநிலை கோயில்களுக்கான பெருந்திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்படும்.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்

பழநி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ராமேசுவரம் கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். வள்ளலாரை போற்றும் வகையில் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும்.

சென்னை மாதவரம் கைலாசநாதர் கோயிலுக்கு ரூ.2 கோடியில் புதிய குளம் அமைக்கப்படும். 100 கோயில்களில் ரூ.15 கோடியில் புதிய நந்தவனங்கள் அமைக்கப்படும். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மீட்கப்பட்ட இடத்தில் ரூ.100 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும்.

இதுதவிர, கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பயிற்சிப் பள்ளிகள் அமைத்தல், நலப் பணிகள் செய்தல், வணிக வளாகம் அமைத்தல் உட்பட ரூ.1,512 கோடியில் மொத்தம் 112 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x