

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தே தீரும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் அப்பிரிவின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். நடந்து முடிந்தசட்டப்பேரவை தேர்தலில் 4 பாஜக எம்எல்ஏக்கள் வெற்றிபெற்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி வழக்கறிஞர் பிரிவுக்கான தனி சின்னத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிமுகப்படுத்தினார்.
கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
மக்களுடன் நெருக்கமாக பழகக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு. வழக்கறிஞர்களுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டில் பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.
காலத்தின் கட்டாயத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தே தீரும்.
தீயினால் சுடப்பட்டு சமுதாயத்தால் அசிங்கப்படுத்தப்பட்டு தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்களே பெரிய தலைவர்களாக வர முடியும்.
அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. திமுகவில் பொத்தி பொத்தி வளர்க்கப்படும் யாரும் தலைவராக முடியாது.
2024-ல் இந்தியா ஒரே கட்சியான பாஜகவை நோக்கி சென்றுகொண்டிருக்கும். 2024-ல் 400எம்.பி.களை பாஜக பெறப்போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.