Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM

நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை அதிகரிப்பு; கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்ட, குடியிருப்பு பெற நிதியுதவி: தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை

கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்டவும், குடியிருப்பில் ஒதுக்கீடு பெறவும் நிதி உதவி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.

பேரவையில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது:

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த வீடு இல்லாத தொழிலாளர்கள் சொந்த வீட்டுமனை வைத்திருந்தால், அவர்கள் வீடு கட்டிக் கொள்வது அல்லதுதமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுநர், உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் 15 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளில் 6 முதல்9-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு சமூக நலத்திட்ட உதவியாக ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். 10-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சிபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தற்போது வழங்கும் கல்வி உதவித் தொகை ரூ.1,000-ல் இருந்துரூ.2.400 ஆக உயர்த்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்களின் 11-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1,000 மற்றும், 12-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை ரூ.1,500 ஆகியவை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரிய தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பட்டப்படிப்புக்கான ரூ.1,500 மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கான ரூ.1,750 ஆகியவை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரிய தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரிய உறுப்பினர்கள் விபத்துமரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவுசெய்த 85 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு ரூ.1,500 மதிப்பிலான முதலுதவி பெட்டி, சீருடை, ஷூ அடங்கிய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும்.

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும்15 நலவாரியங்களின் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால், குடும்பத்துக்கு வழங்கும் உதவித் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும். இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சமையல் தொழிலாளர் நல வாரியம் என்பது சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம் என்றும், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் என்பது அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியம் என்றும் பெயர் மாற்றப்படும். நல வாரியங்களில் பதிவுசெய்தவர்களில் 1 லட்சம் பேருக்குபணித்திறன், அனுபவத்தை அங்கீகரித்து திறன் மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கப்படும் என்பதுஉட்பட 34 அறிவிப்புகளை அமைச்சர் கணேசன் வெளியிட்டார்.

போட்டித் தேர்வுக்கு தனி சேனல்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும். போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை தொடங்கப்படும். தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து, வளரும் தொழில்பிரிவுகளில் திறன் பயிற்சி அளிக்கப்படும். 2014 - 2016 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்புபுதுப்பித்தல் சலுகையாக 2017 - 2019 ஆண்டுகளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x