Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM

வட்டாட்சியரைத் தாக்கிய திமுக நிர்வாகி கைது

திருச்சி

மணப்பாறையில் தனி வட்டாட்சியரை தாக்கிய நகர திமுக பொருளாளரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை எடத்தெருவைச் சேர்ந்தவர் கோபி(52). நகர திமுக பொருளாளரான இவர், நேற்று முன்தினம் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜை சந்தித்து, நில ஆவணம் ஒன்றைக் கொடுத்து பட்டாதாரர் பெயர் விவரம் கேட்டுள்ளார். அதற்கு தனி வட்டாட்சியர், ‘முறையாக மனு அளித்தால்தான் விவரம் தெரிவிக்க முடியும்’ எனக் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டது. அப்போது கோபி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜைதகாத வார்த்தைகளால் திட்டி,தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பாத்திமா சகாயராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோபி மீது 294 பி, 323, 353 ஆகிய3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர்அவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, தனி வட்டாட்சியர் தன்னைத் தாக்கியதாகக் கூறி மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கோபிசிகிச்சைக்குச் சேர்ந்தார். இதையடுத்து, மணப்பாறை மாஜிஸ்திரேட் கருப்பசாமி நேற்று முன்தினம் இரவு அந்த மருத்துவமனைக்கு சென்று கோபியிடமும், போலீஸாரிடமும் விசாரித்தார். அதன்பின் கோபியை வரும் 17-ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். எனினும் சிகிச்சை பெற்று வந்ததால், கோபி தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலேயே இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணப்பாறையிலுள்ள அரசுப் பணியாளர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபியை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து எஸ்.பி (பொ) பெரோஸ்கான் அப்துல்லா, மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று கோபியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது சிறைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு கோபியின் உடல்நலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரை துறையூர் கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x