

அரசுப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் நேற்று மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இப்பிரச்சினை தொடர்பாக அப்பள்ளித் தலைமை ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த பாறைப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கண்ணன் மற்றும் மாணவர்கள் முனீஸ்வரன், சிவா, காளிசெல்வம், கலைச்செல்வம், வினோதா, ஜெயந்தி, மு.முனீஸ்வரன் ஆகியோர் மெல்லக் கற்கும் காரணத்தாலும், பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் தேர்ச்சி பெறாததாலும் பள்ளி நிர்வாகத்தால் மாற்றுச் சான்றிதழ் வழங்கி பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத முடியாதவாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தியிடம் மாணவர்கள், பெற்றோர் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இது குறித்து திருவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி குறிப்பிட்ட பள்ளிக்குச் சென்று மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் நேரில் விசாரணை செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள் கண்ணன், முனீஸ்வரன் இருவரும் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மற்ற மாணவ, மாணவிகளையும் பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளோம். அவர்களையும் பள்ளியில் சேர்த்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி தலைமை ஆசிரியர் உமாதேவி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நூறு சதவீத தேர்ச்சியை காரணம் காட்டி மெல்லக் கற்கும் மாணவர்களை 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுதவிடாமல் தடுத்தாலோ அல்லது மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுப்பதை அறிந்தாலோ சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எஸ்.அம்மாபட்டி அரசு பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட மாணவர்களில் இருவர் மூணாறு தேயிலைத் தோட்டத்துக்கும், ஒருவர் மில் வேலைக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களை கல்வித் துறை அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மீண்டும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படுவர் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.