Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM

சென்னையில் 15 மண்டலங்களிலும் 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையம்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

சென்னை

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தலா ஒரு 24 மணி நேர தடுப்பூசி மையங்களை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில்,அடையாறு மண்டலம், வெங்கட்ரத்னம் நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் கரோனா தடுப்பூசி மையத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.அதைத்தொடர்ந்து 10 கர்ப்பிணிகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக தலா ரூ.6 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலத்துக்கு 3 கரோனா தடுப்பூசி முகாம்கள் என 15 மண்டலங்களில் மொத்தம் 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலக வளாகங்களில் நடத்தப்பட்டு வந்தன. தற்போது வார்டுக்கு ஒரு முகாம் வீதம், 200 வார்டுகளிலும், மொத்தம் 200 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போடுவதை மேலும் அதிகரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில், ஒரு மண்டலத்துக்கு ஒரு மையம் என 15 மண்டலங்களிலும் 24 மணி நேர தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

1.45 லட்சம் தடுப்பூசிகள்

மாநகராட்சியில் இதுவரை 41 லட்சத்து 45 ஆயிரத்து 452 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. குடிசைப் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு 56 ஆயிரத்து63 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் எஸ்.மனிஷ்,விஷூ மஹாஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x