Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

கோயில் யானைகளின் உடல் நலன் தொடர்பாக கால்நடை மருத்துவர் அறிக்கை தாக்கல் செய்ய வனத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல் நலன் குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் மற்றும் கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வளர்ப்பு யானைகள் தொடர்பாக வழக்குத் தொடர்ந்த எல்சா அறக்கட்டளை சார்பில் வாதிடும்போது, “யானைகள் பிடிக்கப்படும்போது, விதிமீறல்கள் நடைபெறுவது குறித்து புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.

ஸ்ரீரங்கம் கோயில் யானை

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளை காவிரி ஆற்றின் அருகே, கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பராமரிக்கலாம், விழாக்காலங்களில் மட்டும் அவற்றை கோயிலுக்கு அழைத்து வரலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

வீடியோ பதிவு அவசியம்

இதையடுத்து, “தமிழகத்தில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் வீடியோ பதிவை தயாரிக்க வேண்டும். அதில், யானைகளின் வயது,பாலினம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.யானைகள் எப்படி பிடிக்கப்பட்டு, வளர்ப்பு யானைகளாக மாற்றப்படுகின்றன என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

மேலும், கால்நடை மருத்துவரை நேரில் அழைத்துச் சென்று, கோயில்களில் உள்ள யானைகளின் உடல் நலன் குறித்து ஆய்வு செய்து, அந்த விவரங்களை சேகரித்து, தலைமை வனப் பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 24-ம்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x