கோயில் பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்படுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

கோயில் பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்படுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவையில், அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதம்:

சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (அதிமுக): அதிமுக ஆட்சியில் அறநிலையத் துறை கோயில்களில் தற்காலிக பணியாளர்களாக இருந்தவர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பணிவரன்முறை செய்ய வேண்டும். கோயில்கள் தொடர்பாக தொலைக்காட்சி தொடங்க நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது தேர்தல் வந்ததால் அதனை நிறைவேற்ற இயலவில்லை. அதை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: திருக்கோயில் பணியாளர்களை பணிவரன்முறை செய்ய ஆணை வெளியிட்டோம் என்றார் சேவூர் ராமச்சந்திரன். 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட பின், ஓராண்டு ஆட்சியில் இருந்தீர்கள். ஆனால், செய்யவில்லை. அதைஇந்த அரசு செய்யும். தொலைக்காட்சி தொடங்குவதாக பேப்பரில் எழுதிவிட்டு சென்றுள்ளீர்கள். அதற்கு பணம் ஒதுக்கவில்லை. 2006-11 வரை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ரூ.384.29 லட்சம் 5 ஆண்டுகளில், அறநிலையத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், 2011-21 வரை 10 ஆண்டுகளில் ரூ. 332.47 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

சேவூர் ராமச்சந்திரன்: பேரவையில் 110-விதியின்கீழ் அறிவிக்கப்பட்டதன் படி, 2015-ம் ஆண்டு 2,217 பேருக்கு பணி வரன்முறை அளிக்கப்பட்டது. தொலைக்காட்சிக்கு அரசு நிதி அளிக்காது. திருக்கோயில் நிதியில் தான் செயல்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில்தான் நிதி ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் சேகர்பாபு: கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பணிவரன்முறை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார். இந்த அறிவிப்புக்குப்பின் ஓராண்டு ஆட்சியில் இருந்த போது ஏன் செய்யவில்லை. தொலைக்காட்சிக்கு அரசாணை பிறப்பித்த பின்னர் ஓராண்டு இருந்த போதும் செய்யவில்லை. உங்களால் விட்டுச் செல்லப்பட்ட பணிகளை முதல்வர் எடுத்து செய்து நடத்தி முடிப்பார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in