

ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல முதுகலை பட்டதாரிகள் மாணவியர் விடுதி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல ஆராய்ச்சி மாணவியர் விடுதியில் நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) புதிதாக மாணவிகளை சேர்க்க முதுகலை பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் முழுநேரமாக படிக்கும் மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகளுக்கு இருப்பிடம், உணவு வசதி செய்து தரப்படும். தாங்கள் படிக்கும் கல்லூரிக்கு அருகேயுள்ள விடுதி காப்பகர்களிடமிருந்து விண்ணப்ப படிவங்களை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் பெற்று மார்ச் 10-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட விடுதியில் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.