Published : 23 Feb 2016 02:38 PM
Last Updated : 23 Feb 2016 02:38 PM

பாமக மாநில மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்: ஜி.கே.மணி பேட்டி

பாமக-வின் மாநில மாநாடு கட்சியின் பலத்தை நிரூபிப்பதுடன், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தருமபுரியில் தெரிவித்தார்.

தருமபுரியில் நேற்று பாமக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது:

கெயில் நிறுவனம் கேரளாவில் மட்டும் நெடுஞ்சாலையோரம் குழாய்களை பதித்து விட்டு தமிழகத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்த நினைப்பது பெரும் ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் அவல நிலையை உணர்ந்து மாற்றுப்பாதையை தேர்வு செய்ய வேண்டும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுக்க குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

காவல் துறையினரின் பணியை 8 மணி நேரமாக நிர்ணயிக்க வேண்டும், 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கவேண்டும். அரசியல் தலையீடுகள் இல்லாமல் காவல்துறை செயல்பட வேண்டும். 27-ம் தேதி வண்டலூரில் நடக்க உள்ள பாமக மாநில மாநாடு எங்கள் கட்சியின் பலத்தை நிரூபிப்பதுடன், ஆட்சி மாற்றத்தையும் உருவாக்கும்.

பூரண மதுவிலக்கு, தரமான இலவச கல்வி, சுகாதாரம், படித்த மாணவர்களுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட பல் வேறு திட்டங்களை உள்ளடக்கிய பாமக-வின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில், மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x