

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட உணவு மண்டலமாக மாநில அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூரில் அச்சங்கத்தின் சார்பில் சி.நாராயணசாமி நாயுடு வின் 92-ம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நேற்று நடைபெற்றது.
மாநாட்டுக்கு தஞ்சை மாவட்டத் தலைவர் த.மணிமொழியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.ஜெகதீசன் வரவேற்றார் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, மாநில பொதுச் செயலாளர் கே.சுந்தரம், மாநில செயலாளர் கே.லட்சுமண பெருமாள், கீழ் வேளூர் தனபாலன், விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மு.சேரன், வெ.சத்திய நாராயணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உழவர்களை ஒருங் கிணைத்து உரிமைக்காக போராட் டங்களை நடத்திய சி.நாராயண சாமி நாயுடுவுக்கு கோவை வையம் பாளையத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் விவசாயிகளின் போராட்டங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான 40 பேரின் குடும்பங் களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என 20-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.
காவிரி மேலாண்மை வாரியத்தையும், கண்காணிப்புக் குழுவையும் மத்திய அரசு உடனே அமைத்து, தமிழகத்தின் பாசன உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ரூ.30 ஆயிரம் இழப்பீடு
வறட்சி, பெருமழையால் பாதிக் கப்பட்ட விவசாயிகளின் அனைத்து கடன்களையும் அரசு ரத்து செய்து, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். முகவர்களைக் கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி கடன் வசூலிப்பதையும், வேளாண் இயந்திரங்களை பறி முதல் செய்வதையும் தேசிய வங்கிகள் கைவிட வேண்டும்.
நிலுவைத் தொகை
கரும்பு ஆலைகளில் விவசாயி களுக்கு சேரவேண்டிய கரும்பு கிரயத் தொகை ரூ.1000 கோடி நிலுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும்.
காவிரி டெல்டாவை பாலை வனமாக்கும் மீத்தேன், ஷேல் காஸ் திட்டங்களைத் தடுத்துநிறுத்தி, இப் பகுதியை பாதுகாக்கப்பட்ட உணவு மண்டலமாக அறிவித்து எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் இப்பகுதியில் வரக் கூடாது என தமிழக அரசு அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும்.
சுயநிதி மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல தோட்டக்கலை, நாற்றுப் பண்ணை களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.