Last Updated : 04 Sep, 2021 07:15 PM

 

Published : 04 Sep 2021 07:15 PM
Last Updated : 04 Sep 2021 07:15 PM

புதுச்சேரி ராஜ்யசபா சீட் யாருக்கு?- நிர்மல்குமார் சுரானா விளக்கம்

புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுச் செயலாளர்களுடன் இன்று (செப். 4) ஆலோசனை நடத்தினார்.

இதில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் நிர்மல்குமார் சுரானா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடந்தது. இதில் முக்கியமாக 3 விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போட்ட மாநிலமாகப் புதுச்சேரியை ஆக்குவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம்.

தற்போது 70 சதவீதம் போடப்பட்டுள்ளது. இது, பல்வேறு மாநிலங்களை விட அதிகமாகும். மாஹேவில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பாஜக சுகாதாரத் தன்னார்வலர்கள் இதற்காக உறுதுணையாக இருந்து பணிசெய்து வருகின்றனர்.

வரும் 30-ம் தேதிக்குள் புதுச்சேரியை 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக்க முயன்று வருகிறோம். வரும் 17-ம் தேதி பிரதமர் பிறந்த நாள். அவரது எண்ணப்படி, எல்லோருக்கும் எல்லாம் போய்ச் சேரவேண்டும். அதன்படி, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டம், விவசாய நிதி உதவித் திட்டம் போன்றவற்றைக் கடைசி மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில், சில வார்டுகள் பிரித்ததில் குறைகள் இருக்கலாம். அதற்காகத் தேர்தலே நடத்த வேண்டாமென்பது ஏற்புடையதல்ல. அதனைச் சரி செய்யலாம். கரோனா நிலவரத்தை ஆய்வு செய்து, தேர்தல் ஆணையம்தான், உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவெடுக்கும்’’.

இவ்வாறு நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.

தொடர்ந்து, அவரிடம் புதுச்சேரியில் ராஜ்யசபா சீட் யாருக்கு? அதில் பாஜக போட்டியிடுமா? எனக் கேட்டதற்கு, ''புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவித்த பிறகு, யார் போட்டியிடுவது என முடிவு செய்யப்படும்'' என்றார்.

மேலும், ''மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மத்திய அரசு பேசி வருவதால், அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்'' என்று நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x