பொதுமக்களுடன் காவலர்கள் பழகும் 'ரீச் அண்ட் ரெய்ஸ்' திட்டம்: ராணிப்பேட்டை எஸ்.பி. தொடங்கி வைத்தார்

விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை ரோந்துக் காவலரிடம் வழங்கிய காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன்.
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை ரோந்துக் காவலரிடம் வழங்கிய காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் - காவல்துறை நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, ஒவ்வொரு குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் வகையில் 'ரீச் அண்ட் ரெய்ஸ்' திட்டத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஏற்கெனவே, பிரத்யேக ரோந்து அமைப்பு, கிராம விழிப்புணர்வுக் குழுக்கள், ரோந்துக் கண்காணிப்பு அமைப்பு, 'நாங்கள் உங்களுக்காக' மற்றும் நவீனமயமாக்கப்பட்ட பிரத்யேக ரோந்து அமைப்பு செயல்பாட்டில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் குற்றச் செயல்கள், போதைப் பொருள் விற்பனை, சட்டம் ஒழுங்கு பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் ரோந்துக் காவலர்கள் பொதுமக்களிடம் நெருங்கிப் பழகும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 'ரீச் அண்ட் ரெய்ஸ்' என்ற திட்டத்தின் மூலம் ரோந்து செல்லும் காவலர்கள் தினமும் 10 குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் விவரங்களைச் சேகரித்து நல்லுறவுடன் செயல்பட உள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சி ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப். 04) நடைபெற்றது. இதில், ஒவ்வொரு குடும்பத்தைச் சந்திக்கும்போதும் அவர்களிடம் காவலர்கள் வழங்க வேண்டிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் வெளியிட்டார். தொடர்ந்து, காவலர்களின் ரோந்து வாகனங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ரோந்துப் பணியைத் தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன்.
ரோந்துப் பணியைத் தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன்.

முன்னதாக, நிகழ்ச்சியில் தீபா சத்யன் பேசும்போது, "இந்தப் புதிய திட்டத்தில் ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காவலர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், பொதுமக்கள் மற்றும் காவலர்கள் இடையில் ஒரு நல்ல உறவு ஏற்படும். அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பங்கள் ஏதாவது நடைபெற்றால் அதை அவர்கள் உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில், இந்த உறவு இருக்க வேண்டும். நாம் பொதுமக்களின் நண்பர்களாக இருக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 10 வீடுகளில் வசிப்பவர்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்" என்றார்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன், காவல் கண்காணிப்பாளர்கள் புகழேந்தி கணேஷ், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in