

நாகப்பட்டினம் அருகே கூட்டுறவு சங்கச் செயலாளரைக் கொலை செய்து, ரூ.3 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சங்கத்தின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் அருகேயுள்ள வெண்மணி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு ஜனவரி 28-ம் தேதி இரவு சங்கச் செயலாளர் காமராஜ் கொலை செய்யப்பட்டு, ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.2.27 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டது தெரியவந்தது.
கொள்ளைக் கும்பல் சங்கச் செயலாளரைக் கொன்றுவிட்டு, தன்னை தாக்கி நாற்காலியில் கட்டிப்போட்டுச் சென்றதாக நகை மதிப்பீட்டாளர் கணபதி(40) போலீஸில் தெரிவித்திருந்தார்.
மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், தஞ்சை சரக டிஐஜி செந்தில்குமார் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்தனர்.
இந்நிலையில், கொள்ளையர் கள் தன்னை தாக்கியதாகக் கூறிய நகை மதிப்பீட்டாளர் கணபதியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சங்கச் செயலா ளரை அவரே கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளை யடித்ததுடன், கொள்ளைக் கும்பல் வந்ததாக நாடகம் ஆடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “கணபதியும், தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள ஈஸ்வரி நகரைச் சேர்ந்த பஞ்சாட்சரம்(38) என்ப வரும் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூரில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் பஞ்சாட்சரம், போலி நகைகளை கணபதியிடம் கொடுத்து, கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். இவ்வாறு மோசடி செய்த பணத்தை இருவரும் பங்கு போட்டுள்ளனர்.
இந்நிலையில், நகைகளை சரிபார்த்த சங்கச் செயலாளர் காமராஜ், போலி நகைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக கணபதியிடம் விசாரணை நடத்திய அவர், மோசடி செய்த தொகையை சங்கத்தில் ஒப்படைக்குமாறும், இல்லையேல் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, அவரைக் கொல்லத் திட்டமிட்ட இருவரும், ஜனவரி 28-ம் தேதி இரவு காமராஜைக் கொலை செய்து, சங்கத்திலிருந்த ரூ.3 கோடி மதிப் பிலான நகைகள், ரூ.2.27 லட்சத்தைக் கொள்ளை யடித்துள்ளனர்.
பின்னர், கொள்ளைக் கும்பல் சங்கத்தில் நுழைந்து, கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, தஞ்சையில் உள்ள பஞ்சாட்சரத்தின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகள், ரூ.1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளோம். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.