நேர்மையான அரசிருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம்: மநீம

கமல்: கோப்புப்படம்
கமல்: கோப்புப்படம்
Updated on
1 min read

நேர்மையான அரசிருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம் என, மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் இன்று (செப். 04) வெளியிட்ட அறிக்கை:

"ஆளும் அரசுகளுக்கெதிராக, நெஞ்சம் நிமிர்த்தி நேர்மைக்குக் குரல் கொடுக்கும் அறப்போர் இயக்கம், அண்மையில் மக்களிடம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்துத்தான் காரியம் ஆற்ற வேண்டியுள்ளது என்று 93 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யார் ஆட்சி செய்தாலும் இந்த அரசு லஞ்சப்புற்றாகவே இருக்கிறது என்ற உண்மையை இந்த அறிக்கை நமக்குச் சொல்கிறது. அதிலும் ஓர் ஆச்சர்யம் என்னவென்றால் இதை மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள் என்பதுதான்.

இதனைக் காணும்போது, எங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஏன் நேர்மையான ஆட்சியை முன்னிறுத்தி இந்தக் கட்சியை ஆரம்பித்தார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

முரளி அப்பாஸ்: கோப்புப்படம்
முரளி அப்பாஸ்: கோப்புப்படம்

மக்கள் வரிப்பணம் பாழாவது, அத்தியாவசியப் பொருட்களின் விலையேறுவது, பொது நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவது, அரசின் கட்டுமானங்கள் அற்பாயுளில் இடிந்து விழுவது இவையெல்லாமே லஞ்சம் என்ற அரக்கனின் கோர விளையாட்டுகளே.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் எங்கள் தலைவர் பேசும்போது, மக்களைப் பார்த்து, நீங்கள் நேர்மையான அரசு அமைக்க வாய்ப்பு கொடுங்கள். அந்த அரசால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியும் என்று கூறினார்.

வந்த முடிவுகள் வேறானாலும், இந்த அரசில் புரையோடிப்போயிருக்கும் ஊழலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்ற செய்தியை அறப்போர் இயக்கம் மூலம் அறியும்போது, காலம் மாறும் மக்கள் மனதும் மாறும் என்பதை உணரமுடிகிறது.

சீரழிந்து கிடக்கும் நிர்வாகத்தை மக்களின் வாக்குதான் மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்ந்து, வருங்காலங்களில் அதற்கான நடவடிக்கைகளில் மக்கள் இறங்குவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் நீதி மய்யத்துக்கு உண்டு என்பதால் அது தன் பாதையில் தொடர்ந்து எழுச்சியுடன் செயல்படும்".

இவ்வாறு முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in