

ஈமு கோழி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்த வழக்கில் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து கோவை டான்ஃபிட் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ஏ.ஜி.குமார்(46). இவர் 2011-ல் திருப்பூரில் ஈமு கோழி நிறுவனத்தை தொடங்கி, மக்களை கவரும் வகையில் விளம்பரங்கள் செய்தார். அதன்படி, ‘தனது ஈமுகோழி நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம்முதலீடு செய்தால், முதலீட்டாளர்களுக்கு 7 ஈமு கோழிக் குஞ்சுகள் அளிக்கப்படும், குஞ்சுகளை வளர்க்க கூடாரம், தீவனம் அளிக்கப்படும், பராமரிப்புச் செலவு மாதம்ரூ.7 ஆயிரம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும், ஆண்டுக்கு ரூ.20,000 வீதம் போனஸ் மற்றும் 2 ஆண்டுகள் இறுதியில் முதலீட்டுத் தொகை திரும்ப வழங்கப்படும் எனவும், விஐபி திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம்ரூ.8 ஆயிரம் வழங்கப்படும், ஆண்டுக்கு போனஸ் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும், கோழிக் குஞ்சுகளை நிறுவனமே வளர்த்துக் கொள்ளும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுப் பணம் திரும்ப அளிக்கப்படும்’ என தெரிவித்தார்.
இதை நம்பி பலர் முதலீடு செய்தனர். 2011 அக்.1 தொடங்கி 2013 மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் 41 பேரிடம் ரூ.62லட்சத்து 51 ஆயிரம் வசூலித்துள்ளார். ஆனால் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு பணம் தரவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னிவாடி பகுதியைச் சேர்ந்தஎன்.ராஜாமணி என்பவர் கோவை
மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் குமார் மீது மோசடி புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் (டான்ஃபிட்) நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சுமத்தப்பட்ட குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் மாணிக்கராஜ் ஆஜரானார்.