Published : 04 Sep 2021 03:13 AM
Last Updated : 04 Sep 2021 03:13 AM

தமிழகத்தில் 7 புதிய ரயில் திட்டங்கள்: அதிகாரிகளின் ஆய்வுப் பணிகள் தொடக்கம்

சென்னை

தமிழகத்தில் 7 புதிய ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்டபல்வேறு புதிய ரயில் திட்டங்கள் பற்றி ஆய்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் 16 புதிய ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு (சர்வே) தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் 7 புதிய ரயில் திட்டங்களும் அடங்கும்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் செங்கல்பட்டு – மாமல்லபுரம் (45 கி.மீ),கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை (40 கி.மீ), திண்டுக்கல் – சபரிமலை (106 கி.மீ), கள்ளக்குறிச்சி – திருவண்ணமலை (69 கி.மீ), கிருஷ்ணகிரி வழி திருப்பத்தூர் - ஓசூர் (101 கி.மீ), முசிறி – சென்னை, பெரம்பூர் (350 கி.மீ),அரியலூர் – நாமக்கல் (108 கி.மீ) என 7 ரயில் திட்டப் பாதைகளுக்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் தொகை விபரம், ரயில்வழித்தடங்கள் விபரம் மற்றும் இணைப்பு வசதி, மண் பரிசோதனை, கட்டமைப்பில் உள்ள சவால்உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து இந்த ஆண்டுக்குள் ரயில்வே வாரியத்திடம் அறிக்கை ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, ரயில்வே வாரியம் முடிவு செய்து,ரயில்வே திட்டமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்புகள் இருக்கின்றன’’ என்றனர்.

இதுகுறித்து டிஆர்இயு மாநில துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, “நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், புதிய ரயில் திட்டங்கள் மிகவும்அவசியமானது. அந்த வகையில் விரிவாக்க திட்டங்களை உருவாக்கஅனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்ய சர்வே நடத்தப்படு வது வரவேற்கத்தக்கது ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x