Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்துக்கான நிவாரணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வனத் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதத்தில் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:

வன விலங்குகளுக்கான அவசரசிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்காக கோவை, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் உயர் வன விலங்கு சிகிச்சை, மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்.

வனத் துறையின் தேவைகள் மற்றும் சிறந்த மேலாண்மைக்காக தமிழக வனத் துறை நடவடிக்கைகள் முற்றிலும் மின்னணுமயமாக்கப்படும். இதன்மூலம், வனஉயிரின வழித்தடங்கள், சூழல்மண்டலங்கள், ஈர நிலங்கள், வனஉயிரின வாழ்விடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் மண்டலங்களை வரையறுக்க முடியும்.

விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

யானை, கடற்பசு காப்பகம்

தென் மாவட்ட யானை வாழிடங்களைப் பாதுகாக்கும் வகையில் அகத்தியர் மலையில் `யானைகள் காப்பகம்' உருவாக்கப்படும். அழிந்து வரும் நிலையில் உள்ள, அரிய கடற்பசு இனத்தையும், அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் வகையில் மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் கடற்பசுபாதுகாப்பகம் அமைக்கப்படும்.

வனக் குற்றங்களை எளிதில் கண்டறிய, ஒவ்வொரு வன மண்டலத்திலும் மோப்பநாய் பிரிவு தொடங்கப்படும். கடல்வாழ் விலங்குகள் வேட்டை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க, சிறப்பு கடல்சார் உயர் இலக்குப் படை உருவாக்கப்படும்.

வனப் பகுதியில் காணப்படும் வெளிநாட்டு களைத் தாவரங்களை அகற்றுவது, வனப் பகுதிகளை வளமான பகுதியாக மேம்படுத்துவது தொடர்பாக தனிக் கொள்கைவகுக்கப்படும். மாநில அளவில்வனம், வன உயிரினக் குற்றங்கள்கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் 212 ஊழியர்களுக்கு, நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x