

திருவாரூரில் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல நடித்து, கடை உரிமையாளரின் மீது மிளகாய்ப் பொடியை தூவி 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை, அவரது கணவருடன் போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரண்குமார்(42). திருவாரூர் அலிவலம் சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது நகைக் கடைக்கு கடந்த 1-ம் தேதி இரவு திருவாரூர் அருகே உள்ள புலிவலம் விஷ்ணுதோப்பைச் சேர்ந்த கணேசன்(41) - கவிதா(35) தம்பதி வந்தனர்.
அங்கு, கணேசனை கடையின் வெளியே நிற்க வைத்துவிட்டு, கவிதா மட்டும் பர்தா அணிந்தபடி கடைக்குள் சென்றார். கடையில், கிரண்குமாரிடம் நகைவாங்குவதுபோல பேசிக் கொண்டிருந்த கவிதா, திடீரென அவர் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு, அவரிடம் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு கடைக்கு வெளியே ஓடினார். உடனே, அவரை துரத்திக்கொண்டு சத்தமிட்டபடி கிரண்குமாரும் வெளியே வந்தார்.
அவரது சத்தம் கேட்டு, கடைக்கு வெளியே நின்று இருந்தவர்கள் கவிதாவைப் பிடித்து, திருவாரூர் போலீஸாரிடம் ஒப்படைத்ததுடன், அவரிடம் இருந்த நகையையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய கணேசனையும் போலீஸார் பிடித்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நகைக் கடை உரிமையாளரின் மீது கவிதா மிளகாய் பொடியை தூவிவிட்டு நகையை பறித்துச் சென்ற சம்பவம் நகைக் கடையில் உள்ளசிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.