

கும்பகோணம் மகாமக குளத்தில் அமிர்த நீர் நேற்று கலக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் இன்று (பிப்ரவரி 13) மதியம் முதல் புனித நீராடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா இன்று சிவாலயங்களில் கொடியேற் றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. முக்கிய விழாவான தீர்த்தவாரி வரும் 22-ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மகாமகக் குளம் மற்றும் சக்கரப் படித்துறையிலும் நடைபெற உள்ளது.
பிரளய காலத்தில் முதன் முதலாக தோன்றிய மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற யாகத்தை தொடர்ந்து ருத்ராபிஷேக தீர்த்தமான அமிர்த நீரை கலசத்தில் எடுத்துக்கொண்டு சென்று மகாமகக் குளத்தில் கலக்கும் பூர்வாங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, ஆதிகும்பேஸ்வரர் கோயிலிலிருந்து அமிர்த நீர் கலசம் கண்ணாடி பல்லக்கில் வைக்கப்பட்டு, யானை முன்னே செல்ல, நாதஸ்வரம், மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டது. மகாமக தீர்த்தவாரிக்கு செல்லும் பாதையில் அந்த அமிர்தநீர் கலசம் கொண்டு செல்லப்பட்டு மகாமக குளத்தை அடைந்தது. அமிர்த நீர் கலசத்தை சிவசங்கர சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் மகாமகக் குளத்துக்குள் எடுத்துச் சென்றனர்.
அந்த கலசத்துக்கு பால், மஞ்சள்பொடி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மகாமக குளத்தில் அமிர்த நீர் கலக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மகாமகக் குளத்தின் நீரை தங்கள் மீது தெளித்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மகாமகக் குளத்தின் நீரை கலசத்தில் எடுத்துக்கொண்டு கண்ணாடி பல்லக்கு ஊர்வலம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலைச் சென்றடைந்தது. இன்று மதியம் கொடியேற்றம் தொடங்கிய பின் பகல் 1 மணிக்கு மேல் மகாமகக் குளத்தில் பக்தர்கள் புனித நீராடலாம் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘108’ ஆம்புலன்ஸ்கள் வந்தன
மகாமகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30 இலவச ‘108’ ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதேபோல பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆம்புலன்ஸ் வாகனம் இரண்டும், குறுகிய பாதைகளில் எளிதாகச் செல்லக்கூடிய 5 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்களும் வந்துள்ளன. மேலும், இவற்றில் பணியாற்றுவதற்காக 150 பணியாளர்களும் நேற்று கும்பகோணம் வந்தனர். அவர்களுக்கு வழிகாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸுக்கு உதவி கேட்டு தகவல் அளித்தால் உடனடியாக தகவலை பரிமாறிக் கொள்வதற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே மினி கால் சென்டர் அமைக்கப்பட்டு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட உள்ளது.
அரசுப் பொருட்காட்சி
செய்தி மக்கள் தொடர்புத் துறை: அரசுப் பொருட்காட்சி 2016- தொடக்க விழா, தலைமை வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், திறந்து வைப்பவர் செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி மைதானம், மாலை 6.
ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்
மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் நேற்று மடத்துத் தெருவில் நாணயங்கள் மற்றும் கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடைபெற்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொதுமேலாளர் பிஸ்வஜித் சாரங்கி முகாமைத் தொடங்கிவைத்தார். சிட்டி யூனியன் வங்கி பொது மேலாளர் மகாராஜன் முன்னிலை வகித்தார். மகாமகத்தையொட்டி, 4 நடமாடும் ஏடிஎம்கள் சிட்டி யூனியன் வங்கி சார்பில் இயக்கப்பட உள்ளது என வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நகராட்சியின் 150-ம் ஆண்டில்…
கும்பகோணத்தில் மகாமக விழா நடைபெறும் நிலையில் இது கும்பகோணம் நகராட்சிக்கு 150-ம் ஆண்டு என்பது கும்பகோணத்துக்கு மற்றொரு சிறப்பாகும். இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார் 1866-ல் கும்பகோணம் நகராட்சியை உருவாக்கினர். கும்பகோணம் நகராட்சி உருவாக்கப்பட்ட பின் நடைபெறும் 13-வது மகாமகம் இது. “மகாமகப் பெருவிழா முடிந்த பிறகே நகராட்சியின் 150-ம் ஆண்டு விழா பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார் நகராட்சி ஆணையர் உமா.
10 ஆயிரம் போலீஸார் வருகை
மகாமகத்தையொட்டி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக முதல்கட்டமாக 10 ஆயிரம் போலீஸார் நேற்று கும்பகோணம் வந்தனர். இந்த போலீஸாருக்கு பணி ஒதுக்கீடு சிறிய மலர் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பணி ஒதுக்கீடு செய்வதை எஸ்.பி. மயில்வாகணன் பார்வையிட்டார்.
ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா
மகாமகத்தையொட்டி கும்பகோணம் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடையிலிருந்து 3-வது நடைமேடைக்கு செல்வதற்கான புதிய நடை மேம்பாலம் நேற்று திறக்கப்பட்டது. மேலும், 30 இடங்களில் தற்காலிக டிக்கெட் கவுன்டர்கள், 50 இடங்களில் கழிவறை வசதி, பயணிகள் ஓய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீஸார் 800 பேரும், சிறப்பு படை போலீஸார் 400 பேரும் கும்பகோணம் வந்துள்ளனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் 40 இடங்கள், தாராசுரம், திருநாகேஸ்வரம் ரயில் நிலையங்களில் தலா 10 இடங்கள் என மொத்தம் 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க கும்பகோணம் ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.