சிட்லபாக்கம் ஏரியில் மணல் எடுத்ததில் கடந்த ஆட்சியில் முறைகேடு: தாம்பரம் எம்எல்ஏ குற்றச்சாட்டு

சிட்லபாக்கம் ஏரியில் மணல் எடுத்ததில் கடந்த ஆட்சியில் முறைகேடு: தாம்பரம் எம்எல்ஏ குற்றச்சாட்டு
Updated on
1 min read

சிட்லபாக்கம் ஏரியில் கடந்த ஆட்சியில் மணல் எடுக்கப்பட்டதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகளின் மீது அவர் பேசியதாவது:

கொள்கை விளக்க குறிப்பில் சிட்லபாக்கம் ஏரிக்கு சுற்றுச்சூழல் நிதியில் இருந்து ரூ.25 கோடி ஒதுக்கியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஓராண்டுக்கு முன் மணல் எடுப்பதற்காக ஒருவருக்கு ஒப்பந்தம் தரப்பட்டது. அவர் 40 நாட்கள் மணல் எடுக்கிறார். 36 வது நாளில் மழை வந்துவிட்டது. அப்போது, அரசுக்கு ஒரு லோடு மணலுக்கு ரூ.126 கொடுத்துவிட்டு அவர் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.

என் கணக்கு சரியாக இருந்தால் அதில் அதிக முறைகேடு நடைபெற்றுள்ளது. மழை பெய்த காரணத்தால், மீண்டும் அவருக்கே டெண்டர் வழங்கப்பட்டது. அவர் மீண்டும் மணலை அதே ஏரியில் எடுத்ததில், பல கோடி ரூபாய் வீணானது.

அவர் ஒரு பக்கம் மணல் எடுத்துக் கொண்டிருந்தபோது, ரூ.25 கோடிக்கான திட்டத்தில் ஒருவருக்கு ஒப்பந்தம் கொடுத்திருந்தார்கள். அவரும் மணல் எடுத்தார். ஆனால், கழிவுகளை அகற்றுவதாகக் கூறி, மணலை எடுத்தார். இதனால் குறைந்தது ரூ.10 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.

நிதி ஒதுக்கிய ரூ.25 கோடியிலும் ரூ.10 கோடி கூட செலவாகியிருக்காது. கடந்த ஆட்சியில் இது குறித்து நீதிமன்றம் செல்ல இருந்த நிலையில், தேர்தல் வந்துவிட்டது. இதுகுறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in