திருமண மையத்தில் பதிவு செய்திருந்த பெண்ணிடம் நெதர்லாந்து டாக்டர் என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது: வெளிநாட்டு மோகத்தில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

திருமண மையத்தில் பதிவு செய்திருந்த பெண்ணிடம் நெதர்லாந்து டாக்டர் என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது: வெளிநாட்டு மோகத்தில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
Updated on
1 min read

திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்த இளம்பெண்ணிடம் நெதர்லாந்து மருத்துவர் எனக் கூறி பல லட்சங்களை நூதன முறையில் பறித்த 2 நைஜீரியர்களை சென்னை சைபர் கிரைம் போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரபல திருமண இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். இவரிடம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் முகமது சலீம் என்ற நபர் அறிமுகமானார். இதன்தொடர்ச்சியாக மும்பையில் இருந்து பேசிய பெண் ஒருவர், ‘நெதர்லாந்தில் இருந்து டாக்டர் முகமது சலீம் உங்களுக்கு பார்சல் அனுப்பி உள்ளார். அதனை பெற்றுக் கொள்வதற்கு ரூ.28 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்’ என்று கூறினார். பரிசு பெறும் ஆவலில் அந்தப் பெண்ணும் மும்பை பெண் அனுப்பிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார்.

பின்னர் பார்சலில் வெளிநாட்டு ‘கரன்சி’ இருப்பதால் அபராதமாக ரூ.77 ஆயிரம், ரூபாயாக மாற்ற ரூ.1 லட்சம், வங்கிக் கணக்கை புதுப்பிக்க ரூ.95 ஆயிரம் கேட்டுள்ளார். இதேபாணியில் பல்வேறு வகையில் மிரட்டி ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரம், அந்த நபர் இந்தியா வருவதற்கு விமான பயண கட்டணமாக ரூ.50 ஆயிரம் என அந்த கும்பல் கேட்க கேட்க பணத்தை சென்னை பெண் அனுப்பியுள்ளார்.

கடந்த ஜூலை 17-ம் தேதி டெல்லி விமான நிலையத்துக்கு வந்துவிட்டதாகவும், அவர் இந்தியாவில் நுழைவதற்கு பி.ஐ.ஓ. கார்டு இல்லை என்பதால், அதற்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பணம் அனுப்புமாறும் கோரியுள்ளனர். இதற்கு சென்னை பெண், செல்போன் லோக்கேஷன் அனுப்பச் சொன்னதும் தொடர்பு எண்ணை அந்த நபர்கள் பிளாக் செய்துவிட்டனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் டெல்லி உத்தம் நகரில் தங்கி இருந்த மோசடி கும்பலை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நைஜீரிய நாட்டை சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ, சிலிட்டஸ் இகேசுக்வு என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப் டாப்கள், வங்கி கணக்கு அட்டைகள், ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சென்னை அழைத்து வந்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டு டாக்டர்கள் படங்கள் மற்றும் அவர்களுடைய தகவல்களை திருடி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் பல பெண்களை இவ்வாறு ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்ளாமல் தனிப்பட்ட விவரங்களை பெண்கள் பகிர வேண்டாம். பரிசு பார்சல் என்று ஆசை வார்த்தை காட்டினாலும் ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in