

கரோனா தாக்கத்தால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில், வீட்டில் உள்ள சிறுவர்களையும் வேலைக்கு அனுமதிக்கும் பெற்றோர்களால் குழந்தை தொழிலாளர் அதிகரித்து வருகின்றனர். இதை சில சிறுதொழில் வணிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிறுவர்களின் உழைப்பைஉறிஞ்சி வருகின்றனர்.
கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 1-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல்8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதில் குடும்ப வறுமை காரணமாக சில மாணவர்கள் விவசாயப் பணி, தச்சுத்தொழில், ஓட்டல்களில் துப்புரவு, தையல் தொழில், மளிகைக் கடை மற்றும் வாகன பழுது நீக்கும் கடை என பல்வேறு வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுபற்றி குழந்தை தொழிலாளர் நலத்துறைஅலுவலர்கள் அறிந்த போதிலும், ஒவ்வொருவரின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அதை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் சிறுவர்களை தங்களுக்கு சாதகமாக சிறுதொழில் வணிகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். காலையிலேயே பணிக்கு வரும் சிறுவர்களிடம் மாலை 6 மணிவரை உழைப்பை உறிஞ்சி, அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.50, 100 என வழங்கி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட் டையில் உள்ள தச்சுத்தொழில் கூடத்தில் இரு சிறுவர்கள் மர வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் பேசியபோது, “பள்ளிக்கூடம் மூடித்தானே இருக்கிறது. அதனால் வேலைக்கு போய் வா என வீட்டில் இருப்பவர்கள் தெரிவித்தனர். நாளொன்றுக்கு ரூ.50 கொடுப்பதாகத் தெரி வித்தனர். இடையே சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய் வருவோம்” என்றனர்.
இதுதொடர்பாக தச்சுக் கூட உரிமையாளரிடம் பேசியபோது, “இந்த சிறுவர்கள் தச்சு வேலை செய்பவரிடம் அவ்வப்போது வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வர். மற்றபடி அவர்களை வேலையில் வைத்திருக்கவில்லை” என்றார்.
திருக்கோவிலூர் கோட்ட குழந்தைத் தொழிலா ளர் தடுப்பு அலுவலர் அரியமுத்து கூறும்போது, “கடந்த மாதம் வரை நடத்தப்பட்டசோதனையில் திருக்கோவிலூர் கோட்டத்தில் 5 கடைகளில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, சிறுவர்களை மீட்டு கடை உரிமை யாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே சிறுவர்கள் பணியில் அமர்த்தப்பட்டது குறித்த தகவல் அறிந்தவர்கள், 1098 என்ற இலவச எண்ணிற்கு தகவல் அளிக்கலாம் என்றார்.