

கொலை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் பலாத்காரம், லஞ்சம், வழிப்பறி, கடத்தல், சிலை திருட்டு, பெண்களை தவறாக சித்தரித்தல், கள்ள நோட்டு அச்சடித்தல் போன்ற வழக்குகளில் சமரச உடன்படிக்கையை ஏற்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் என்பவரது புகாரின் பேரில் பிரபு, சந்தி ரமோகன் ஆகியோர் மீதான வழக்கு, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மாரியம்மாள் என்பவர் புகாரின் பேரில் வீரபாண்டியன் மீது பதிவு செய்த வழக்கு, திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் கெம்பையா என்பவரின் புகாரின் பேரில் சாகுல் உட்பட 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களில், ‘புகார்தாரர், எதிர்தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால், அந்த சமரசத்தை ஏற்று வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல குற்றங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றங்களாக உள்ளன.
சிறப்பு சட்டங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் மனுதாரர்களின் சமரச உடன்படிக்கையை ஏற்க முடியாத நிலை நீதிமன்றத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை பொருத்தவரை சமரச உடன்படிக்கையை ஏற்கும்போது மிகவும் கவனமாக கையாள வேண்டும். சொத்து, வணிகம், பங்குதாரர் பிரச்சினை, திருமணப் பிரச்சினை, வரதட்சணை, குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் சமரசத்தை ஏற்கலாம்.
அதே நேரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசத்தை ஏற்க முடியாது. குறிப்பாக கொலை, கொலை முயற்சி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் பலாத்காரம், லஞ்சம், போலி ஆவணம் தயாரித்தல், பொய் சாட்சியம் அளித்தல், வழிப்பறி, கொள்ளை, கடத்தல், சிறுமிகள் மீதான பலாத்காரம், சிலை திருட்டு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை தவறாக சித்தரித்தல், கள்ள நோட்டு அச்சடித்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் சமரச உடன்படிக்கையை ஏற்க முடியாது.
இது தவிர ஆயுதச் சட்டம், லஞ்ச ஒழிப்பு சட்டம், பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டம், கந்து வட்டி தடைச் சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் சமரச உடன்படிக்கையை ஏற்று ரத்து செய்ய முடியாது. அதே நேரத்தில் சமரச உடன்படிக்கை ஏற்கும் முன் குற்றவாளியின் முந்தைய நடத்தையையும் கருத்தில் கொள்ள வேண்டும். சமரச உடன்படிக்கையை ஏற்பதில் நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக செயல்படக்கூடாது. ஏனெனில் சமரச உடன்படிக்கை, அந்த வழக்கில் இருந்து குற்றவாளியை தப்பிக்க செய்வதாக மட்டும் இருக்கக்கூடாது.
இந்த வழக்குகளை பொருத்தவரை உசிலம்பட்டி காவல் நிலைய வழக்கை ரத்து செய்ய முடியாது.
விருதுநகர், சாணார்பட்டி காவல் நிலைய வழக்குகள் திருமணப் பிரச்சினை தொடர்பானது.
அந்த வழக்குகளில் சமரச தீர்வை ஏற்கலாம். அதற்காக அந்த வழக்குகளை 28.1.20156-ல் பட்டியலிட்டு சமரச உடன்படிக்கையை ஏற்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.