Published : 10 Feb 2016 03:12 PM
Last Updated : 10 Feb 2016 03:12 PM

‘ஆன்லைன்’ மூலம் வாக்களிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்

‘ஆன்லைன்’ மூலம் வாக்களிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாஜக வாக்குச் சாவடி ஊழியர் கூட்டம் நேற்று நடந்தது. அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, ‘‘தமிழ்நாட்டில் மற்ற தேசியக் கட்சிகள் காணாத வளர்ச்சியை பாஜக பெற்றுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒரு பொறுப்பாளர் இருக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

திருவண்ணாமலையில் 4 பக்தர்கள் உயிரிழந்தது வேதனைக் குரியது. இனிமேல், அதுபோல நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் கும்பகோணம் மகாமகம் விழா நடைபெற உள்ளது. எனவே, நன்கு நீச்சல் தெரிந்தவர்களை அங்கு பணியமர்த்தி போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

1.50 லட்சம் வாக்காளர்களை நீக்கியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்களை சேர்த்தது யார்?, எப்படி சேர்க்கப்பட்டனர். எந்த கட்சியினர் சேர்த்தார்கள் என்பது குறித்து விளக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் போலி வாக்காளர்களை நீக்கியதை உறுதிப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் பலர் ‘ஆன் லைன்’ மூலம் வாக்களிக்க விரும்புகின்றனர். இதை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். அப்படிச் செய்தால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை. பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

நாங்கள் பிப்ரவரி 2-ம் தேதியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். மத்திய அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு கேட்போம். மத்திய தொகுப்பில் இருந்து 71 சதவீதம் மின்சாரம் கொடுத்ததால் தமிழ்நாட்டில் மின் சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட ரயில் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் சுரேஷ் பிரபு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழக மீனவர்கள் பிரச் சினைக்கு தீர்வுகாண ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x