Published : 03 Sep 2021 08:33 PM
Last Updated : 03 Sep 2021 08:33 PM

சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்களுக்குப் பணி: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை

சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களைத் தமிழக அரசு உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின்போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு மூப்பு முறையில் நடைபெற்று வந்தன. 2009, 2010ஆம் ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களில் சுமார் 5,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,258 பட்டதாரி தமிழாசிரியர்கள் இன்னும் பணிநியமனம் செய்யப்படவில்லை.

இவர்கள் வேலை பெறவிருந்த சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர், அதிமுக தலைமையிலான அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அதனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 5,000 பட்டதாரி ஆசிரியர்களும் 1,258 பட்டதாரி தமிழாசிரியர்களும் பணிநியமனம் பெற இயலாமல் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.

அவ்வாறு பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து (TET) விலக்கு பெற்றனர். ஆனாலும் இதுவரையில் அவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்று 22-7-2013 அன்று அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை.

இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாகப் பெரும் பாதிப்படைந்துள்ள 5,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,258 பட்டதாரித் தமிழ் ஆசிரியர்களுக்கு, கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின், உயர் நீதிமன்ற ஆணையின்படி வேலை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x