மணப்பாறையில் தனி வட்டாட்சியர் மீது தாக்குதல்: திமுக நிர்வாகி மீது வழக்கு

மணப்பாறையில் தனி வட்டாட்சியர் மீது தாக்குதல்: திமுக நிர்வாகி மீது வழக்கு
Updated on
1 min read

மணப்பாறையில் தனி வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியதாகத் திமுக நகரப் பொருளாளர் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மணப்பாறை, பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜே.பாத்திமா சகாயராஜ் (46). மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நகர நில வரித் திட்ட தனி வட்டாட்சியராக உள்ளார்.

திமுகவைச் சேர்ந்த நகரப் பொருளாளர் கோபி, இன்று பிற்பகல் ஃபாத்திமா சகாயராஜைச் சந்தித்து ஒரு நிலத்தின் பட்டா தொடர்பான விவரங்களைக் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில், ஃபாத்திமா சகாயராஜை கோபி தாக்கியதுடன், மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த ஃபாத்திமா சகாயராஜ் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மணப்பாறையில் வட்டாட்சியர் தாக்கப்பட்ட தகவலறிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறை ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களைப் பூட்டிவிட்டு, பணியைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். வட்டாட்சியரைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே வருவாய் ஆய்வாளர் குணசேகரன் அளித்த புகாரின் பேரில், கோபி மீது 294 பி, 323, 353 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேவேளையில் வட்டாட்சியர் தன்னைத் தாக்கியதாகக் கூறி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்த கோபி, பின்னர் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து, போலீஸார் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in