Last Updated : 03 Sep, 2021 07:19 PM

 

Published : 03 Sep 2021 07:19 PM
Last Updated : 03 Sep 2021 07:19 PM

புதுவையில் வருடந்தோறும் ‘நெல் திருவிழா': அமைச்சர் தேனி. ஜெயக்குமார் அறிவிப்பு

புதுச்சேரி

பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க வருடந்தோறும் தை மாதத்தில் நெல் திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் தேனி. ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (செப்.3) மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளித்து அமைச்சர் தேனி.ஜெயக்குமார் பேசியதாவது:

‘‘பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவித்திடவும், அத்தகைய நெல் ரகங்களைப் பாதுகாத்திடவும் வருடந்தோறும் தை மாதத்தில் ‘நெல் திருவிழா’ நடத்தப்படும். இதில் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகள் 2 கிலோ இலவசமாக வழங்கப்படும்.

வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் காய்கறிகள் நோக்கில் பூச்சிக்கொல்லி அல்லாத ‘என் வீடு என் நலம்’ என்னும் புதிய திட்டம் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தைப் பரீட்சார்த்த முறையில் செயல்விளக்க மாதிரித் திட்டமாக இவ்வாண்டு அறிமுகப்படுத்த உள்ளோம்.

ரூ.5,000 மதிப்பிலான காய்கறி விதைகள் (அ) பழமரக்கன்றுகள் தோட்டக்கலை உபகரணங்கள், நிழல்வலைக் கூடங்கள் போன்றவை இலவசமாக பாசிக் மூலம் வழங்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான தோட்டக்கலை பயிர் விதைகள் அனைத்துப் பிரிவினருக்கும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

புதுச்சேரி மாநிலத்தில் கறவைப் பசுக்களின் மலட்டுத்தன்மையை நீக்குவதற்காக ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மூலம் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப மையம் ஒன்று நிறுவப்படும்.

இந்த ஆண்டு எம்.எஸ்சி பயோடெக்னாலஜி என்ற புதிய முதுகலை பட்டப்படிப்பை 20 இடங்களுடன் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்துக்குப் புதுச்சேரி பல்கலைக்கழக கல்விக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியானது, மாநில அளவிலான தொழில்நுட்ப நிறுவனமாக பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் மதிப்புக்கூட்டு தொழில்நுட்பப் பயிற்சி முதன்மைப் பயிற்சியாளர்களுக்குக் கொடுக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு பிப்டிக் மாநில நோடல் நிறுவனமாகச் செயல்பட உள்ளது.

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு ஊதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும். ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெறும் பயிற்சி கால்நடை மருத்துவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.6,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மறுசீரமைக்கப்பட்டு பொலிவுபடுத்தப்படும். பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்படும். வனத்துறையில் சீருடைப் பணியாளர்கள் விரைவில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புதிய பணிகள் உருவாக்கப்படும்.

காரைக்கால் பிராந்தியத்தில் தனியாக வனத்துறை அலுவலக வளாகம் அமைக்கப்படும். புதுச்சேரியில் உயிரியல் பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன் வனக் காவலர் தங்குமிடம், மயில் கூண்டுகள் மற்றும் ஊசுடு பறவைகள் சரணாலயத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பார்வைத் திறன் குறைபாடுடைய இளநிலை மற்றும் முதுநிலைக் கல்லூரி பயிலும் பார்வைத்திறன் குன்றிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்துக்குப் பயணப்படி ரூ.100லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளி ஒருவர் மாற்றுத்திறனாளி அல்லாத ஒரு நபரைத் திருமணம் செய்வதின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.25,000லிருந்து ரூ.1 லட்சமாகவும், மாற்றுத்திறனாளி ஒருவர் மற்றொரு மாற்றுத்திறனாளியைத் திருமணம் செய்வதின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அன்றைய தினமே வழங்கப்படும். இஸ்திரி பெட்டி, முடிதிருத்தும் உபகரணங்கள், தவில், நாதஸ்வரம் ஆகியவை தொழிற்கருவிகளாக வழங்கப்படும். மண்பாண்டம் செய்வதற்கு பண உதவி குறைந்தது ரூ.10 ஆயிரம் வழங்க ஆவன செய்யப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டு அன்றைய தினமே வழங்கப்படும். ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை ஒரு குழந்தைக்கு ரூ.20,000 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ.40,000 ஆக உயர்த்தப்படுகிறது.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மணப்பெண்ணின் திருமணத்திற்காக நிதியுதவி ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்படுகிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஆதரவற்ற விதவைப் பெண்ணின் மகளின் திருமணத்திற்கான நிதியுதவி ரூ.25,000ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்படுகிறது.

விதவைப் பெண் மறுமணத்திற்கான நிதியுதவி ரூ.50,000-ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்த்தப்படுகிறது. ஒரு பெண் குழந்தைக்கான நிதியுதவி (8 மற்றும் 10-ம் வகுப்பு) ரூ.25,000 சேமிப்பு பத்திரமாக பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படும் தொகை ரூ.30,000 ஆக உயர்த்தப்படுகிறது".

இவ்வாறு அமைச்சர் தேனி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x