

திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக இன்று போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.
2019 ஜூலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அ.முகமது ஜான், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால், மற்ற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இந்நிலையில், எம்.எம்.அப்துல்லாவின் மனு செப்.01 அன்று ஏற்கப்பட்டது. 3 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், எம்.எம்.அப்துல்லா போட்டியின்றித் தேர்வாவது உறுதியானது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் இன்று (செப். 03) அதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இது தொடர்பாக, இன்று கி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலில் காலி இடம் 1. சட்டப்படி செல்லத்தக்கதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுவின் எண்ணிக்கை 1. இரண்டும் சமமாக உள்ளதால், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 53 (2), 1961-ம் ஆண்டு தேர்தல் நடத்துவது குறித்த விதி - 11(1)-ன்படி திமுகவைச் சேர்ந்த மு.முகமது அப்துல்லா போட்டியின்றி முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்" எனத் தெரிவித்தார்.
முகமது அப்துல்லா பின்னணி
46 வயதான எம்.எம்.அப்துல்லா,திமுக வெளிநாடுவாழ் இந்தியர் நல அணியின் இணைச் செயலாளராக இருக்கிறார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். மனைவி ஜன்னத். இரு மகள்கள் உள்ளனர். 1993-ல் புதுக்கோட்டை நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளரான அவர், நகர அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், சிறுபான்மையினர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் என்று திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
திமுகவின் பலம் 8 ஆக உயர்வு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுகவுக்குத் தற்போது ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ், எம்.சண்முகம், திருச்சி சிவா, பி.வில்சன் ஆகிய 7 எம்.பி.க்கள் உள்ளனர். அப்துல்லா போட்டியின்றித் தேர்வாகியுள்ளதால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.