தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப். 03) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், 1998-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளதாகவும், கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது எனவும், மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது எனவும் வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2008-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனவும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், அந்த உத்தரவில் நீதிபதிகள், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது எனவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை எனவும், இந்த வழக்கில் எந்தத் தகுதியும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in