மதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கலை வங்கி மேலாளர் கண்காணிக்கும் வசதி: மத்திய நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சு.வெங்கடேசன்: கோப்புப்படம்
சு.வெங்கடேசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

கல்விக் கடன் வழங்கல் கண்காணிப்பு வழிநடத்தும் வங்கி மேலாளர்களுக்குத் தொழில்நுட்ப வசதி வழங்க வேண்டும் என, மக்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (செப். 03) ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"மதுரை மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான கல்விக் கடன் வழங்குவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அதில், இவ்வாண்டுக்கான இலக்கு நிச்சயித்துச் செயல்படத் திட்டமிடப்பட்டது. அப்பொழுது எனது கவனத்துக்கு வந்த முக்கியப் பிரச்சினையில் ஒன்று, மாவட்டத்தில் வழிநடத்தும் வங்கி மேலாளருக்குக் கல்விக் கடன் வழங்கலைக் கண்காணிக்கும் வசதி இல்லை என்பது.

இது உண்மையில் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்த அடிப்படைத் தகவல் கூட வழிநடத்தும் வங்கி மேலாளரால் அணுக முடியாத நிலை இருந்தால் பின்னர் எப்படி மாவட்டங்களில் கல்விக் கடன் திட்டத்தைக் கண்காணிக்கவும், முன்னெடுக்கவும் முடியும்? இது மதுரைக்கான பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்சினையாக உள்ளது. எனவே, இதுபற்றி மத்திய நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கோப்புப்படம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கோப்புப்படம்

'கல்விக் கடன் வழங்குதல் தொடர்பாக வித்யாலட்சுமி தளத்தில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வங்கிக் கிளையும் எவ்வளவு கடன் விண்ணப்பங்கள் வரப் பெறுகின்றன, கடன் வழங்குகின்றன என்பதைக் கண்காணிக்கிற தொழில்நுட்ப வசதி வழிநடத்தும் மாவட்ட வங்கி மேலாளர்களுக்குத் தனியாக 'உட்செல்லும்' (Log in) வகையில் இல்லை. இதை வழங்குவது கல்விக் கடன் வழங்கலை விரைவுபடுத்த உதவும், வித்யா லட்சுமி திட்டத்தின் சிறப்பான செயலாக்கத்தையும் உறுதி செய்யும். எனவே, அத்தகைய தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்' எனக் கோரியுள்ளேன்.

இத்தகைய தொழில்நுட்ப வசதி தரப்படாததால் வழிநடத்தும் வங்கி மேலாளர்களின் பணி மிகச் சிரமமானதாக உள்ளது. ஒவ்வொரு வங்கியையும் அவர் தொடர்புகொண்டு விவரங்கள் பெறுவது, கண்காணிப்பது என்பது கால விரயத்தை உருவாக்குவதோடு, மாவட்ட நிர்வாகத்தால் எளிதில் புள்ளிவிவரங்களைப் பெற முடியாத ஒன்றாகவும் மாறியுள்ளது. எனவே, மாவட்ட முதன்மை வங்கி மேலாளருக்கு இத்தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தர கேட்டுக்கொண்டுள்ளேன்".

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in