Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM

திருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் சீரான தொழில் வளர்ச்சிக்காக ரூ.218 கோடியில் புதிய தொழிற்பேட்டைகள்: 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் ரூ.218.22 கோடியில் 4 புதியதொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று பேரவையில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று குறு, சிறு, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

சிட்கோ மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரானதொழில் வளர்ச்சி ஏற்படுத்த திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் மொத்தம் 394 ஏக்கரில் ரூ.218.22கோடியில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன்மூலம் 7 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

புதிய தொழில் முனைவோர், தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான கல்வித் தகுதி 12-ம் வகுப்பு எனதளர்த்தப்படும். தனி நபர் முதலீட்டு மானியம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்திவழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு நிதித் திட்டத்தின் கடன் உதவியுடன் ரூ.50.06 கோடியில் நவீனமயமாக்கப்படும்.

கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில், சங்க உறுப்பினர்களின் நிதி பங்களிப்புடன் ரூ.17.57 கோடியில் 585 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பாட்டுக்காக அடிப்படைக் கட்டமைப்பு வசதிஉருவாக்கப்படும். கொசிமாமூலம் கோவை சொலம்பாளையத்தில் 42.42 ஏக்கரில் ரூ.18.13 கோடியில் ரூ.9.06 கோடி தமிழக அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

சிறப்பு முதலீட்டு மானியம்

நலிவுற்று வரும் பாரம்பரிய குறு, சிறு தொழில்களான உப்புஉற்பத்தி, வெள்ளிக் கொலுசு, வெள்ளி விளக்கு தயாரித்தல், பித்தளை, பாத்திரப் பொருட்கள், பூட்டு உற்பத்தி மற்றும் பட்டு சார்ந்த தொழில்கள் ஆகியவை சிறப்பு தொழில் வகையின் கீழ்கொண்டு வரப்பட்டு சிறப்புமுதலீட்டு மானியம் தரப்படும்.

சேலம் கிழங்கு மாவு, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவைதொழிற் கூட்டுறவு சங்கத்தின் (சேகோசர்வ்) 4 கிடங்குகளில் ரூ.45.05 கோடியில் இயந்திரமயமாக்கல், விரிவுபடுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.40 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு 1.07 லட்சம் சதுர அடியில் கட்டப்படும்.

டான்சியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த பிரத்யேக காட்சியகம், மின் வணிக இணைய முகப்புரூ.3 கோடியில் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு புத்தாக ஆதார மானிய (டான்சீட்) திட்டத்தின் மூலம், 50 புத்தொழில்களுக்கு மானியமாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x