Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM

தமிழகம், கேரளா, கர்நாடகா கடலோரங்களில் தீவிரவாதிகள் பதுங்கலா?- ரகசியமாக படகு மூலம் ஊடுருவியதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை

சென்னை

தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தமிழகம், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 15 பேர் படகு மூலம்ரகசியமாக தமிழகம் வந்துள்ளதாகவும், அவர்கள் தமிழகத்தில் இருந்துகேரளா சென்று, பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த தகவலை தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில போலீஸாருக்கு உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கேரளாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தீவிரசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டகடலோரப் பகுதிகளில் கியூ பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாதிகளுக்கு உதவியதாக, சந்தேகத்தின்பேரில் சென்னை பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்இலங்கை தமிழர்கள் 2 பேரைபிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கேரளாவிலும் தீவிர சோதனைநடந்து வருகிறது. கேரள மாநிலம் கொடுங்கலூர் அழிக்கோடுமுதல் சாவக்காடு வரையிலானகடலோரப் பகுதிகள், கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கடற்கரையை ஒட்டியுள்ளபகுதிகளில் வாகனங்கள், தங்கும்இடங்கள், ஓட்டல்களில் தீவிரசோதனை நடந்து வருகிறது.

3 மாநில மீனவர்களுக்கும் இதுகுறித்து அறிவிப்பு கொடுக்கப்பட்டு, சந்தேகப்படும் வகையில் நடமாடும் படகுகள், நபர்கள் குறித்து தகவல் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 மாநில கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் இணைந்து 24 மணி நேர ரோந்து செல்கின்றனர். கடலோர காவல் நிலையங்களில் உள்ள போலீஸாரும் சோதனை செய்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ), கியூ பிரிவு போலீஸாரும் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாதிகள் தமிழகத்தில் இருந்து கேரளா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால், தமிழகத்தின் கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் இருந்து கேரள கடல் பகுதிகளான முனம்பம், அழிக்கோடு பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நபர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அப்பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் பதுங்கல் குறித்துகர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரள கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இவர்கள் கடல் வழியாக நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கர்நாடக போலீஸார், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக்கிய எச்சரிக்கை

என்னால் சில விஷயங்களை வெளிப்படையாக தெரிவிக்க இயலாது. உளவுத் துறையின் அதிமுக்கிய எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோர மற்றும் அதை ஒட்டிய வனப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகம் அளிக்கும் வகையிலான செயல்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேச விரோத செயல்களை தடுக்கும் பணியில் கர்நாடக காவல் துறையின் முக்கிய அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடகாவில் ஒருவரை தேசிய புலனாய்வு முகமைகைது செய்துள்ளது. கடந்த மாதத்தில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கேரள எல்லையை ஒட்டியுள்ள குடகு, ஹாசன், தட்சிண கன்னடம்,உடுப்பி, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு பணிக்காக ஏற்கெனவே வார இறுதி மற்றும் இரவுநேர‌ ஊரடங்கு அமலில் உள்ளது. தீவிரவாத நடமாட்டம் காரணமாக எல்லையை முழுமையாக மூடும் எண்ணம் இல்லை. இத்தகையசூழலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை அனுமதிப்பது பற்றிஅரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. வரும் 5-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்த பிறகு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x