காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பாடு: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் தகவல்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பாடு: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் தகவல்
Updated on
1 min read

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் தெரிவித்துள்ளார்.

கோவை ஆனைகட்டி அருகே உள்ள தூவைப்பதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ‘நீலகிரி உயிர்க்கோள இயற்கை பூங்கா’ அமைந்துள்ளது. இப்பூங்காவில் 284-க்கும் மேற்பட்ட மர வகைகள், 157 வகை பறவைகள், 59 வகை பட்டாம்பூச்சிகள், 70 வகை மூலிகைச் செடிகள் கொண்ட மூலிகைத் தோட்டம் ஆகியவை உள்ளன. 2 நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ள சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின், இந்தப் பூங்காவை நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் குறித்து இளம்தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பூங்கா அமைந்துள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, காலநிலை மாற்றம் குறித்த பாரீஸ்ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தார். அதன்பிறகு, காலநிலை மாற்றத்துக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதராக ஜான் கெர்ரியை நியமித்தார். அவர், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் இணைந்து அதிக கவனம் செலுத்தி வருகிறோம். சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் அவ்வப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், மரபுசாரா எரிசக்தி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு, நிலச்சரிவுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பேரிடர் மேலாண்மை, பேரிடருக்கு முந்தைய தயார்நிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

மேலும், பேரிடர் மேலாண்மை குறித்த கல்விமுறையை உருவாக்க வாஷிங்டன் பல்கலைக்கழக நிபுணருடன் அமெரிக்க தூதரகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை குறித்த 40 மணி நேர வகுப்பை உருவாக்கும் திட்டத்துக்கு அமெரிக்கா உதவிகரமாக இருக்கும்.

தற்போதுள்ள பாடத்திட்டத்துடன் அந்த வகுப்பை இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதவிர, கடல்சார் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீர்வு காண்பது குறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் நீர், கடல்சார் நிபுணர்கள், தொழில்நுட்ப நிபுணர்களை அழைத்து வரும் 2022-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் 3 நாட்கள் முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in