

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க நேரக் கட்டுப்பாடு இல்லை. மேலும், தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து சீ்சன் மற்றும் ரிட்டன் டிக்கெட் பெறலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பணியாளர்கள், பெண்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி ரயில்களில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆண் பயணிகளுக்கு மட்டும் அலுவலக நேரங்களில் பயணிக்க கட்டுப்பாடு இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மின்சார ரயில்களில் மாணவர்களுக்கான நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில்களில் பயணிக்க எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லை. விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணச்சீட்டு வாங்கி மின்சார ரயில்களில் பயணிக்கலாம். அதுபோல், கல்வி நிறுவனங்களின் உரிய ஆவணங்களைக் காண்பித்து, ரிட்டன் மற்றும் சீசன் டிக்கெட்களையும் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றனர்.
ஆண்களுக்கு அனுமதி
சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் அலுவலக நேரங்களில் ஆண் பயணிகளுக்கு இருந்த நேரக் கட்டுப்பாடு நேற்று மாலை முதல் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் கரோனா தடுப்பூசி (2 டோஸ்) போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே ரயில்களில் பயணிக்க டிக்கெட் வழங்கப்படும். ரிட்டன் டிக்கெட், சீசன் டிக்கெட்களையும் வாங்கி பயணம் செய்யலாம்.
ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டிருந்தால், அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் பயணம் செய்யலாம். ஏற்கெனவே, பயணித்து வரும் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.
ரயில்களில் பயணிக்கும்போது பயணிகள் கட்டாயம் கரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டுமென தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.