Published : 20 Feb 2016 01:58 PM
Last Updated : 20 Feb 2016 01:58 PM

அரசியல் கட்சிகளுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை புறக்கணிக்கும் கட்சிகளுக்கு மக்கள் உரிய தண்டனை வழங்குவார்கள் என பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

தமிழர் தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று கோவை வந்தார். பின்னர், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக அன்னூரில் போராட்டம் நடத்தி வரும் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக, கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்த திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் 2011 தேர்தலில் மக்கள் தோல்வியைக் கொடுத்தார்கள். அதேபோல், 2016 தேர்தலிலும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை புறக்கணிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் மக்கள் உரிய தண்டனையை வழங்குவார்கள்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும்கூட, அங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை; கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும். எனவே, தமிழர் நலனுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவளிப்போம். பிப்.28-ம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் யாருக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்யப்படும்.

பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். ஈழ மக்களுக்கான போராட்டம் மீண்டும் நடக்கும்.

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர், நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதில், பாஜகவின் பாசிச முகம் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. பிரதமர் தலையிட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மீது, அடக்குமுறை ஏவி விடுவதை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசு தீர்வு காண வேண்டும்.

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிப்பது சரியல்ல. காலக்கெடு நிர்ணயித்து அதை அறிவிக்க வேண்டும்; அரசிதழிலும் வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் கொண்ட மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவது கண்டனத்துக்குரியது. சமஸ்கிருத திணிப்பு தொடர்ந்தால், இந்தி எதிர்ப்பைப் போல், தமிழகத்தில் மீண்டுமொரு போராட்டம் வெடிக்கும்.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா, ஐபிஎஸ் அதிகாரி ஹரிஷ் என, உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் நடக்கும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற அதிகாரிகளின் பதவியை நீட்டித்து, ஆலோசகர்களாக நியமிப்பதால், முறையாக பதவி பெற்றவர்கள் பணி செய்ய முடியாத சூழல் உருவாகி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x