

சிவகங்கை டெய்லரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லர் அர்ஷத். இவரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி, அவரது உறவினர் பாண்டியராஜ் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வசந்தியை நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தேனியைச் சேர்ந்த பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த ரூ.2,26,000 கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் வசந்தியை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பிரிவு போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ராஜலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல் ஆய்வாளர் வசந்தியை போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் வசந்தியை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
விசாரணையின் போது வசந்தியைத் துன்புறுத்தக் கூடாது. வசந்தி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வசந்தியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.