தமிழகத்தில் 4 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

அமைச்சர் தா.மோ.அன்பரசன்: கோப்புப்படம்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் 4 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 02) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 18 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், தமிழகத்தில் 4 இடங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன் விவரம்:

"தமிழ்நாடு சிட்கோ மூலம், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுத்திட, திருச்சி மாவட்டம் - மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் - காவேரிராஜபுரம், செங்கல்பட்டு மாவடம் - கொடூர் மற்றும் மதுரை மாவட்டம் - அக்கிமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் 394 ஏக்கர் பரப்பளவில், ரூ. 218.22 கோடி மொத்த திட்ட மதிப்பில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் மொத்தம் சுமார் 7,000 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சிப்காட்டிடமிருந்து, 120 ஏக்கர் நிலம் பெறப்பட்டு ரூ.85 கோடி திட்ட மதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.இதன் மூலம், சுமார் 2,000 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில் ரூ.65 கோடி திட்ட மதிப்பில் 144 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன்மூலம், சுமார் 2,500 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூர் கிராமத்தில் 98 ஏக்கரில் ரூ.45.94 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன்மூலம், சுமார் 1,500 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், சக்கிமங்கலம் கிராமத்தில் ரூ.22.28 கோடி திட்ட மதிப்பில் 32 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 1,000 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்".

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in