Last Updated : 02 Sep, 2021 04:45 PM

 

Published : 02 Sep 2021 04:45 PM
Last Updated : 02 Sep 2021 04:45 PM

ஓபிஎஸ் மனைவி உடல் இறுதி அஞ்சலிக்குப் பிறகு பெரியகுளத்தில் தகனம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு பெரியகுளத்தில் இன்று மதியம் எரியூட்டப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66) நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது உடல் நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அன்றிரவு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், வெல்லமண்டி நடராஜன், எம்.சி.சம்பத், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன், வேடசந்தூர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பரமசிவம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், அதிமுக தேனி மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான் உட்படப் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி, மாஃபா.பாண்டியராஜன், கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் தங்கதமிழ்ச் செல்வன், எல்.மூக்கையா, லட்சுமணன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உட்படப் பலரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பல மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவினர் ஏராளமானோர் வந்திருந்தனர் குறுகிய தெருவில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. எனவே முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலரும் வீட்டிற்குள் சென்று அஞ்சலி செலுத்த சிரமப்பட்டனர். இதனால் 10 நிமிடத்திற்கு மேல் நெரிசலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதி அஞ்சலிக்குப் பிறகு சம்பிரதாய முறைப்படி நீர்மாலை எடுத்தல், பிறந்த வீட்டு சேலை அணிவித்தல் உள்ளிட்ட இறுதிச் சடங்குகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை ரதத்தில் விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டு டிராக்டரில் ஊர்வலமாகக் கிளம்பியது.

தேவர்சிலை அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் பூர்வீக வீட்டின் வழியே சென்று கம்பம் ரோடு, காந்தி சிலை, தண்டுபாளையம், வராக நதி, பழைய பேருந்து நிலையம் வழியாக நகராட்சி எரிவாயு மின் தகன மயானத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு சந்தனக் கட்டைகள், விறகுகளின் மேல் விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. உடலுக்கு மகன் ப.ரவீந்திரநாத் எரியூட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x