

காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து 48 மணி நேரம் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நாளை (செப்.3) காலை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகனராஜ் இன்று (செப்.2) செய்தியாளர்களிடம் கூறுகையில், “காரைக்கால் மாவட்டத்தில் செப்.3-ம் தேதி காலை 8 மணி முதல் 5-ம் தேதி காலை 8 மணி வரை தொடர்ந்து 48 மணி நேரம் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் உள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஆகிய 13 இடங்களில் இரவு, பகல் என அனைத்து சமயங்களிலும் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாதவர்கள் மாலை, இரவு நேரங்களில் தடுப்பூசி செலுத்தும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84 நாட்களைக் கடந்தவர்கள் இம்முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்” என்றார்.